கடந்த 2018ஆம் ஆண்டு வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைகளைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரடியனாறு பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று அவர் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2025 – 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் மேல் நீதிமன்ற நீதிபதியுமான ரங்க திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடையும். முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது கொழும்புக்கு அழைத்துவரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கையூட்டல் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று(08) பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டன.
மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இரவு உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்து வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச சேவையில் பல்வேறு நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்குப் பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.