சீனாவில் தயாரிக்கப்பட்ட 84எஸ் ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 46 தோட்டாக்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தேகொட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.யு.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை உதய கம்மன்பில சந்தித்துள்ளார். அவரது சட்டத்தரணி என்ற வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க வேண்டுமென சட்டத்தரணி உதய கம்மன்பில முன்னதாக திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதன் தம்மிக்க சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யபட்டுள்ளார். போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்தின் பெங்கொக் நகரை நோக்கிச் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்கெடுப்பு தாமதமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக எதிர்வரும் மே 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவினால் தபால்மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்தது.
திருகோணமலை கந்தளாய் – அக்போபுர பகுதியில் பஸ் மற்றும் லொறி ஆகியன மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14.04.2007இல் மரணித்த தோழர் லோகேஸ் அவர்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் இன்று….
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்களை பெயரிடுமாறு சபாநாயகர் ஊடாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய இந்தக் குழுவை நியமிப்பதற்கான பரிந்துரை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 24 மணித்தியால அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 106 எனும் அவசர எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.