கொக்குத்தொடுவாயை பிறப்பிடமாகவும், நீராவிப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்ட திரு.கிட்டினபிள்ளை சிவலிங்கம் அவர்கள் நேற்று (10-05-2025) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகிறோம். இவர் எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) உறுப்பினரும், எமது கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் (கரிக்கட்டுமூலை தெற்கு) முன்னாள் உறுப்பினருமாவார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது மத்தியகுழு கூட்டம் இன்று (11.05.2025) கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதானமாக நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள், மேலதிக பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் தமிழ் மக்கள் வாழும் சபைகளில் ஏனைய தரப்புகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து நடைபெற்று வரும் பேச்சுக்கள் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி, மட்டக்களப்பு – காந்தி பூங்கா வளாகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. என் மௌனம் என் குற்றமல்ல, உன் செயல்தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பு நினைவகம் எனும் பெயரில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்ட பின்னர், அதற்கு பதிலாக இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது. கனடா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 50-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குருணாகலிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு இன்று காலை விபத்திற்குள்ளானது.