மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை சொல்வோம் என்ற வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி அமலநாயகி, தமிழர் வரலாற்றினை இளம் சமூகங்கள் மறந்தவர்களாகவும் அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்றும் அதனை நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்

தமிழர்களின் பிரச்சினைக்கு இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் சர்வதேசம் இனியும் பாராமுகமாக இருக்காது நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.