வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கேட்கவில்லை. ஜனநாயக முறைப்படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவான சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் சு.காண்டீபன் மாநகர மேயர் பதவியை கோருவதாக வெளியான செய்தி தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலில் வவுனியா மாநகர சபையின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்ட நான், அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளேன்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வீட்டு சின்னத்தில் வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராக எனது வட்டாரத்தில் நான் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக மீண்டும் அதிகூடிய வாக்குகளால் சங்கு சின்னத்தில் வெற்றிபெற்றேன்.
தேர்தல் முடிந்த பின்பே மேயர், பிரதிமேயர் யார் என தீர்மானிப்பதாக கட்சித் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு ப இருந்தது.
அந்தவகையில், அதி கூடிய வாக்குளைப் பெற்று நான் வென்ற நிலையில் என்னை பிரதிநிதித்துவப்படுத்தும் புளொட் அமைப்பும், எனது ஆதரவாளர்களும் எனக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். நான் கோரவில்லை.
எனவே, ஜனநாயக முறைப்படி எனக்கு மேயர் பதவி தந்தால் நான் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து இந்த மாநகரத்தை முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன்.
அடுத்த முறையும் சங்கு சின்னத்தில் அதிகூடிய வாக்குளைப் பெற்று வெல்லும் நிலையை உருவாக்குவேன்.
மக்களின் விருப்பத்துக்கு கட்சித் தலைமைகள் செய்யட்பட வேண்டும் என்றார்.