முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக முன்னெடுக்கப்படும் ஊர்தி பவனி இன்றைய தினம் வவுனியாவை அடைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.
இதன்போது, வவுனியாவில் உள்ள மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதேவேளை, முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்படி, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நாவற்குழி பகுதியில் இன்று கஞ்சி வழங்கப்பட்டது.
அதேநேரம், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று திருகோணமலை – குச்சவெளி – வேலூர் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டது.
திருகோணமலை – 3ஆம் கட்டை பகுதியிலும் யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அதேநேரம், வவுனியா – மொத்த மரக்கறி விற்பனை நிலையத்துக்கு அருகிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.