திருகோணமலை – குச்சவெளி பகுதியில் மீனவர் ஒருவர் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் கடற்படை பேச்சாளரைத் தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமளித்தார். சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட சில தரப்பினரைக் கைது செய்து, கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின் பிடியிலிருந்து தமது படகை விடுவித்துத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

கடற்படையினர் எச்சரித்ததுடன், எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவர்கள் தொடர்ந்தும் தப்பிச் செல்ல முற்பட்டதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கடற்படையினர் முயன்றுள்ளனர்.
அதன்போது, குழப்பம் ஏற்பட்டு, தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதால் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியின்போது, கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் உள்ளிட்ட தரப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.