உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று காலை கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் ஆரம்பமானது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர். அத்துடன், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் சுற்றாடல் வாரத்தையும் அறிவித்துள்ளது. இதனிடையே சுற்றுலா விடுதிகளைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மையைப் பேணும் நோக்கில் விடுதி கடற்கரை பராமரிப்பாளர்களை நியமிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்குத் தொடர்புடைய சுற்றுலா விடுதிகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றுலா விடுதிகளைச் சூழவுள்ள கரையோர பகுதியைப் பாதுகாப்பதற்கு உரியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவதுடன், இதற்காக அந்த நபருக்குக் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.
“அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான பயண எல்லை” என்ற கருப்பொருளில், இந்தத் திட்டம் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள கடற்கரையின் தூய்மையைப் பேணுவது சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் எனவும் இந்தத் திட்டம் கடல் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘ப்ளு பிளக்’ சான்றிதழை இலங்கை பெறுவதற்கு இந்தத் திட்டம் பங்களிக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல அரச அலுவலகங்களில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.