நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் வைத்தியசாலைகளில் எம்.ஆர்.ஐ, கதிரியக்க பரிசோதனை உள்ளிட்ட வைத்திய ஆய்வுகூட சேவைகள், மருந்து வழங்குதல் உட்பட்ட மருந்தாளர் சேவைகள் மற்றும் மறுவாழ்வு பிரிவின் சேவைகள் செயற்படவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, கண்டி, அனுராதபுரம், காலி, யாழ்ப்பாணம், உள்ளிட்ட நாடு பூராகவுமுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் புற்றுநோய் வைத்தியசாலை, தாய் மற்றும் சேய் வைத்தியசாலைகள், சிறுநீரகவியல் வைத்தியசாலை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவில்லை.