ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை சிலருக்கு வயித்தெரிச்சலைக் கிளப்பிவிட்டுள்ளது, அவர்களைப் புலம்ப வைத்துள்ளது என்பது உண்மையே. இன்று காணக் கிடைத்த இணையத்தள பத்திரிகையின் பதிவு ஒன்றில் இருந்து அதனை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஈபிடிபி முகாம் வாசலில் தமிழரசுக் கட்சியை நிற்க வைத்தது சங்கு – சைக்கிள் கூட்டுத்தான் என்கின்ற அதியுச்ச ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் அந்தப் பதிவு. ஆத்திரமும் அது குறித்த எழுத்தும் அவரது தனிப்பட்ட விடயம். அதைப் பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவையில்லை. ஆனால் போராட்ட வரலாற்றை புலி – படையினர் யுத்த காலத்திலிருந்து ஆராய முற்படுகின்ற இவ்வாறான குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சில அரசியல் எழுத்துப் பிழைப்புவாதிகள் (அனைத்துப் பத்தி எழுத்தாளர்களும் அல்லர்) தமது பதிவுகளில் அடுக்கிக்கொண்டே போகும் விடயங்களை வெறுமனவே கடந்து சென்று விடவும் முடியாது.
தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளுக்கு காரணம் அவர்களது கடந்த காலங்களும் அவ்வப்போது அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாடுகளுமேயன்றி வேறெதுவுமில்லை, குறிப்பாக சங்குக் கூட்டணியல்ல.
புலிகளை உசுப்பேத்தி அல்லது மண்டை கழுவி வடக்கு அரசியல் பரப்பில் மரணதண்டனைக் கலாச்சாரத்தையும் சகோதரப் படுகொலைகளையும் அரங்கேற்றிய கூட்டணித் தலைவர்கள் (பழைய தமிழரசுக் கட்சி) இளைஞர்களின் வேகத்திற்கும் வெறுப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த காலத்துடன் தமிழரசுக் கட்சி ஏறக்குறைய காணாமல் போயிருந்தது. பிற்காலத்தில் ஆனந்தசங்கரி காட்டிய கூத்தால், சின்னம் தேடித் திரிந்த புலிகள் இயக்கம் முன்னர் தங்கள் கொலைப்பட்டியலில் சிக்கியிருக்காத தமிழரசுக் கட்சியின் சின்னத்தை கூட்டமைப்புக்கு எடுத்துக் கொடுத்தது.
ஆனாலும் யாருக்குமே விசுவாசமில்லாத புதிய தமிழரசுக் கட்சியினர் தமது அதிகார வர்க்க சலுகைகளுக்காக புலிகளுக்கும் பதவியிலிருந்த அரசாங்கங்களுக்கும் அவ்வப்போது தலையும் வாலும் காட்டி அரசியல் செய்ததன் காரணமாக புலிகளின் கொலைப் பட்டியலிலும் பெயரிடப்பட்டிருந்தனர்.
தமிழரசுக் கட்சியுட ன் ஜென்மப் பகை கொண்ட பொன்னம்பலம் குடும்பம் தருணம் பார்த்து புலிகளுக்கு விசுவாசம் காட்டத் தொடங்கியது. அவ்வாறான ஒரு நிலைமை வரும்வரை குமார் பொன்னம்பலத்தின் பாதுகாவலர்களாக, பிற்பட்ட காலங்களில் அவரது மகனும், மகனது கூட்டாளிகளும் வசைபாடித் திரிந்த, துரோகப் பட்டம் கட்டிய போராளி அமைப்புகளின் உறுப்பினர்களே செயற்பட்டார்கள் என்பதை வரலாறு முழுதும் தெரியாத அரசியல் எழுத்துப் பிழைப்புவாதிகள் தமது வசதிக்காக மறைத்து விடுகின்றனர். யுத்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகளின் தகவலாளிகளாக, உறங்கு நிலை உறுப்பினர்களாக, பொருளாதார மூலங்களாக செயற்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக் கொண்டவர்கள் ஏராளமானோர் பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் புதிய தமிழரசுக் கட்சிக்குள்ளும் தஞ்சமடைந்து கொண்டனர் என்பது இரு தரப்புமே அறிந்த உண்மை.
ரெலோவையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து தமக்கு தாமே புனித நீர் தெளித்துக் கொண்டது புலிகள் அமைப்பே. பிழைப்புவாதிகள் சொல்வதைப் போல தமிழ்த் தேசியப் போராட்டத்தில் கறுப்பு வரலாறும் துரோக வரலாறும் எழுதப்பட்டது வேறு யாராலுமல்ல, புலிகளாலேயே.
புளொட் அமைப்பின் உருவாக்கிகளில் முக்கியமானவரான சுந்தரத்தை தனிநபராக, நயவஞ்சகத் தனமாக கொலை செய்து சகோதரப் படுகொலையை ஆரம்பித்த புலிகள் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இயக்க உறுப்பினர்களை கொத்து கொத்தாக கொன்றொழித்து போராட்டத்திற்கு உச்ச அளவுப் பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டனர். அதை விட பெரிய சோகம் என்னவென்றால் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவருமே ஏதோ வியாதி வந்து மரணித்தவர்கள் போல வருடாவருடம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட அமைப்பினரால் நடாத்தி முடிக்கப்படுகிறது. ஏன் அவ்வாறு எனக் கேட்டால், நடந்தவைகளை பேசி முரண்பாடுகளை வளர்ப்பதை விட அனைத்து இயக்கப் போராளிகளுக்கும் இடையில் அர்த்தமுள்ள உடன்பாடுகளை வளர்க்க விரும்புகிறோம், அனைத்து இயக்க போராளிகளினதும் தியாகங்கள் போற்றப்பட வேண்டியது என்கிறார்கள். பார்க்கப்போனால் இவர்கள் தான் புலிகளுக்கு புனித நீர் தெளித்துள்ளார்கள் போல தெரிகிறது. உண்மையிலேயே சொல்லப்போனால் தமிழ்த் தேசியம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதன் காரணம் ஆயுதப் போராட்ட அமைப்புகளும் அவற்றின் தியாகங்களுமேயன்றி மிதவாத தமிழ் அமைப்புகளல்ல.
அதே நேரத்தில் இவ்வாறான படுகொலைகள் குறித்த வரலாற்று வெள்ளையடிப்புகள், உள்ளதை உள்ளபடி சொல்லி வளர்க்காத போராட்டத்தின் வரலாற்றில் பல பக்கங்களை ஒவ்வொருவரும் தமது தேவைக்கேற்ப அழித்துவிடக்கூடிய நிலையையே உருவாக்குகிறது.
இன்று, அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவோ அல்லது தத்தமது எதிர்கால இருப்பு காரணமாகவோ ஒப்பந்தங்களுக்குள் செல்லும் தரப்புகள் எதிர்காலத்தில் எதிரெதிரே நின்று வசைபாட மாட்டார்கள் என்று நாங்கள் நம்பக்கூடாது. ஏனென்றால் எமது வரலாறு அதுவே. வசைபாடக் கூடிய ஆட்கள் கால நேரத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு தரப்பிற்குள்ளும் தயாராகவே உள்ளனர். பிரதிநிதித்துவ அரசியலில் அதிகாரம் மிக முக்கியமானது. அது உள்ளூராட்சி மன்றமாகட்டும், மாகாண சபையாகட்டும், நாடாளுமன்றமாகட்டும் எதுவானாலும் அதிகாரம் மிக்க பிரதிநிதித்துவம் மிக முக்கியம்.
அதைத் தான் கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்களும் தொண்டர்களும் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் இணக்கப்பாடு காணும் போது சில தரப்புகள் தமக்கு சில இடங்களைக் கோருவது. அதனைத் தெளிவாகத் தெரிந்துதான் ஏனைய தரப்புகள் அதனை மறுப்பது. அவ்வாறில்லையென்றால் மாற்றம் என்ற பெயரில் திசைகாட்டிக்கு மக்கள் புதிதாக ஆதரவளித்திருக்க மாட்டார்கள். இதனை இந்த எழுத்துப் பிழைப்புவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு, அப்புகாத்துகளும் புத்திஜீவிகளும் நிறைந்துள்ள தமிழரசுக்கும் காங்கிரசுக்கும் மூளை வேலை செய்யவில்லையா எனப் பதறக்கூடாது. ஆயுதப் போராட்ட அரசியலுக்கும், பிரதிநிதித்துவ அல்லது தேர்தல் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவானவை. அதற்குரிய களங்கள் மற்றும் யுக்திகளும் கூட மிகவும் வேறுபட்டவை. இல்லை, எக்காலத்திலும் எமது அணுகுமுறைகள் ஒன்றாகவே இருக்க வேண்டும் என மிரட்டுபவர்கள் மீண்டும் ஒரு தடவை உயிரைத் தியாகம் செய்து, குருதி சிந்தி, குறைந்த பட்சம் வியர்வை சிந்திப் போராடத் தயாராக இருக்கிறார்களா என ஒருமுறையேனும் சுய பரிசோதனை செய்ய முன்வர வேண்டும்.
எழுபதுகளில் இரண்டு தரப்பினதும் தலைமைகள் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட போது, இரு தரப்புகளினதும் ‘மூளை’கள் நன்கு வேலை செய்ததால், உணர்ச்சி வசப்பட்டு முன்வைத்த, நீண்டகாலத் திட்டம் எதுவுமில்லாத ஈழப்பிரகடனத்தின் விளைவுகள் என்றும் எமக்கு ஒரு பாடமாகும்.
கே.என்.ஆர்
10.06.2025