வவுனியா மாநகரசபை மேயரும், எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், கட்சியின் தொழிற்சங்க பிரிவு பொறுப்பாளருமான ஆசிரியர் தோழர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் நேற்று எமது கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகரையும் சந்தித்துள்ளார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களையும் ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
தங்கமுலாம் பூசப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கி தம்மிடம் இருக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் பர்டி ப்ரேமலால் திசாநாயக்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி வௌிக்கொணர்ந்துள்ளார். குறித்த துப்பாக்கி பொலிஸ் மத்திய துப்பாக்கி களஞ்சியசாலையில் இருந்து வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று அல்ல என விசாரணை அதிகாரிகள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு மருந்தான ஹியூமன் இம்யூனோ குளோபுலின் மருந்தில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொடிய பெக்டீரியா நீர் இருந்தமை நீதிமன்றத்தில் நேற்று(20) வௌிக்கொணரப்பட்டது. இந்த மருந்து தொடர்பில் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் முடிவுகளை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு தெரிவித்தபோது இது தெரியவந்தது.