ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk), இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்.  இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர், நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரையும், வடக்கு கிழக்கின் ஆர்வலர்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், கொழும்பிலும் சிவில் சமூகத்தினரையும், கர்தினாலையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கடிதமொன்றைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு கருத்துரைத்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், செம்மணி சிந்துபாத்தி மயான பகுதிக்கு வருகை தருவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.