இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கோரிக்கை கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழி செய்யுமாறு அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை கடிதத்தை சமர்ப்பித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
போருக்குப் பின்னரும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள் தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக, அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வோல்கர் டர்க்கிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.