இந்தியாவில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தையடுத்தே, இலங்கையால் இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் சில கடல் பகுதிகளில் மீன்பிடி உரிமைகளை இந்தியா விட்டுக்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரம், நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படாமல், 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த முடிவின் விளைவுகள் இன்றும் தமிழ்நாட்டில் உணரப்படுவதாக அவர் கூறினார்.
அவசரகால நிலை அமுலாக்கத்தின் 50ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவசரகால நிலை இந்தியாவின் உலகளாவிய ஜனநாயக பிம்பத்தை எவ்வாறு சேதப்படுத்தியது என்பதையும், அந்தக் காலத்தின் தனிப்பட்ட அனுபவங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தேசத்தை விட குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பது இதுபோன்ற சர்வாதிகார சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்தார், அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான அவசர நிலைகளைத் தடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியாவினால் தாரைவார்க்கப்பட்ட கச்சதீவை மையப்படுத்தியே, எஸ்.ஜெய்சங்கரினால் இந்த கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன.