பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய வகையான இரத்தம் ஒன்று இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Guadeloupe எனும் கரீபியத் தீவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘Gwada negative’ என்று அழைக்கப்படும் புதிய இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 48ஆம் இரத்த வகை அது என்று நம்பப்படுகிறது.
இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள், காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம், தொழில் நிலைமைகள் உள்ளிட்ட அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக வாழ்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உடனான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரை, ஈரான் தூக்கிலிட்டதாக ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்குள் சட்விரோதமாக ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மித்தெனிய தோரகொலயாய பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 25 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட இருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, போர் நிறுத்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொரளை, வனாத்தமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி முன்னெடுக்கப்படும் ‘அணையா தீபம்” போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் நாளை வரை தொடரும்.