‘மாகாணசபை முறைமையும் அதிகாரப்பகிர்வும்’ எனும் தலைப்பில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) ஒழுங்கமைப்பில் தாயகத்தில் நடாத்தப்பட்டு வருகின்ற கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக, எதிர்வரும் 19.10.2025 அன்று கனடாவிலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கனடா நாட்டுப் பிரதிநிதிகளால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயகத்திற்கு வெளியே, அதிகளவில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது அரசியல் நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு, அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டமோ, மாகாணசபை முறையோ முழுமையான தீர்வாக அமைய முடியாது என்பது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தெளிவான நிலைப்பாடாகும்.
இந்த அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்கள் கேட்டுப் பெற்றுக்கொண்டதோ அன்றி இலங்கை அரசு விரும்பி வழங்கியதோ அல்ல. மாறாக தமிழ் மக்கள் மீது இந்திய இலங்கை அரசுகளால் திணிக்கப்பட்ட தீர்வாகும். ஆனாலும் துரதிஷ்டவசமாக இன்றுவரை அதுவே நடைமுறை அரசியலமைப்பின் பகுதியாக உள்ளது.
அதிகாரப் பரவலாக்கம் எனும் பெயரில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த மிகக் குறைவான அதிகாரங்களும்கூட பின் நாட்களில் பெருமளவில் பிடுங்கி எடுக்கப்பட்டு விட்டன. நாம் சமஷ்டி பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்க, தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பில் தமிழ் மக்கள் சார்ந்து காணப்பட்ட விடயங்கள் களவாடப்படுகின்றன அல்லது விதி மீறலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
காணி, கல்வி, சுகாதாரம், கமநல சேவை, மாகாணப் பொதுப் போக்குவரத்து, மரபுரிமைகள் எனப் பல விடயங்கள் சாதாரண பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றச் சட்டங்கள் மூலம் மத்திய அரசிற்கு மாற்றப்பட்டு விட்டன. தமிழ் மக்களின் இயலாமை என்பதற்கு அப்பால் அறியாமையும் இவற்றிற்கு காரணமாகின்றன.
மாகாணசபை பற்றிய இக் கருத்தரங்குகள், தமிழ் மக்கள் முழுமையான ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டிராத ஒரு முறைமையை விளம்பரப்படுத்துகின்ற அல்லது முன் நகர்த்துகின்ற முயற்சியல்ல. தமிழ் மக்களின் ஏகோபித்த கோரிக்கையான சமஷ்டிக் கோரிக்கையின் தேவையை மடைமாற்றுகின்ற வேலைத்திட்டமும் அல்ல.
பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனை கொண்ட புத்திஜீவிகளாலும், அரச அதிகாரிகளினாலும், தென்னிலங்கை அரசியல்வாதிகளாலும், மத பீடாதிபதிகளாலும் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில், அரசியல் தீர்வு பற்றிய மாயையைக் காட்டிக் காட்டியே மாகாண ஆட்சி அதிகார முறைகளை தமிழர்களிடமிருந்து நிரந்தரமாக அகற்றிவிட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதே கருத்தரங்குகளின் அடிப்படை நோக்கமாகும்.
நாட்டின் அரசியலமைப்பில் உள்ள விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த தேவையான அழுத்தங்களை வழங்குவதன் மூலம், தமிழ் மக்களின் கைகளில் உள்ள மிகக்குறைந்த மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கல் முறைமையை இல்லாதொழிக்கும் தென்னிலங்கை முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு ஏற்பாடாகவே இக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுகின்றன.
மேலும், இவ் விடயத்தில் உள்ள யதார்த்தமான நிலைமையை வெளிக்கொணர்வதும், தமிழ் மக்கள் மத்தியில் இம் முயற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இக் கருத்தரங்குகளின் நோக்கமாகும்.
சமஷ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வுக்காக போராடுவதும், கையில் கிடைத்துள்ளதை வைத்து எம் இனத்தின் இருப்பைக் கரையாமல் பாதுகாப்பதும் ரயில் பாதையின் சமாந்தரமான இரண்டு தண்டவாளங்கள் போன்றதாகும். விரும்பியோ விரும்பாமலோ அதில் தமிழ்ச் சமூகம் பயணம் செய்ய வேண்டியிருப்பது காலத்தின் தேவையாகும்.