நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்
(தோழர் ஆனந்தியண்ணர்)
மலர்வு : 16.05.1945
உதிர்வு : 22.10.2021

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), அதன் வெகுஜன முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் மறைந்த பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில்,
அவருடன் இணைந்து கடந்து வந்த பாதையின் அனுபவங்களை மீண்டும் நினைவிற் கொள்வதன் மூலம் எமது அஞ்சலிகளை கணிக்கையாக்குவோம்.
இளமையிலேயே தன்னைச் சுற்றியும், தன் சமூகத்தைச் சுற்றியும் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டவர், சிறார்களின் போசாக்குக்கான சத்துணவுத் திட்டத்தின் செயற்பாட்டாளராக காந்தீயம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தேசிய இன விடுதலைப் போராட்டம், ஆயுத வழிப் போராட்டமாக பரிணாமம் பெறத் தொடங்கிய ஆரம்ப காலங்களின் போராளியாக தன்னை மாற்றி விடுதலை அமைப்பு உறுப்பினர்கள் ஒன்று கூடவும், செயற்படவும் தன் இல்லத்தையே உவந்தளித்தார், அதனால் தலைமறைவு வாழ்க்கையைப் பெற்றதோடு ஆயுத போராட்ட இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய தலைமைக் குழு உறுப்பினரும் ஆனார்.
எளிமை, சமரசமில்லாத கொள்கைப் பிடிப்பு, இடதுசாரிக் கோட்பாடு மீதான ஈடுபாடு, தலைமைகள் மீதான அன்பான விசுவாசம், பிராந்திய மற்றும் பூகோள அரசியல் குறித்த யதார்த்தமான நிலைப்பாடு போன்ற பல பண்புகள், செயற்பாடுகள் மூலம் கேள்விக்கிடமின்றி மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தான் சார்ந்த அமைப்பின் செயலாளராக அரசியல் பணிகளை, கடமைகளை நிறைவேற்றினார்.
பதவியின் அதிகாரங்களை அனுபவிக்காதவர், பதவியினால் பொருளாதார வளங்களை பெருக்காதவர், மிகக் குறைவான தனது வருமானத்தின் ஒரு பகுதியைக் கூட தனது அமைப்பின் நலிவடைந்துள்ள தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
“பேராசைகளால் சீரழிகின்ற தமிழ்த் தேசிய ஜனநாயக அரசியலில் முப்பது வருடங்களாக ஒரு கட்சியின் செயலாளராக ஒரே மனிதர் செயற்படுவது என்பது நம்ப முடியாத ஒன்று, அதிசயமானது” என்றுரைத்த , வடக்கு மாகாண சபையின் முன்னாள் சபை முதல்வர் சீ. வி. கே சிவஞானம் அவர்களின் அஞ்சலிக் குறிப்பை நாம் நினைவுபடுத்திக் கொள்ளும்போது, தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் சுய பண்புகளினதும் , போராட்ட வாழ்க்கையின் நெறிமுறைகளினதும் மேன்மையை புரிந்து கொள்ள முடிகிறது.
அவருடன் நாமும் பயணித்தோம் என்பதைவிட அவரிடம் ஏராளம் நாம் கற்றுக்கொண்டோம் என உணரும்போது மட்டும்தான் எமது அஞ்சலிகள் அர்த்தமுள்ளதாகிறது.