கடனளிக்கும் நாடுகளுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்ட கொள்கை ரீதியான உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது. இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வை அடுத்த மாதத்தில் பரிசீலிப்பதற்கு இது வழிவகுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் சுமார் 4.2 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பெரிஸ் க்ளப்பின் இணை தலைமை நாடுகளின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த உடன்படிக்கைகள், இலங்கையின் நான்கு வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பரிசீலிக்க வழி வகுக்கும் என நாணய நிதிய திட்டத்தின் இலங்கை தூதுக் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதிக்குள் நிர்வாக சபை, இந்த மதிப்பாய்வை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அளவுகளுக்கு ஏற்ப, கடனை மறுசீரமைப்பதற்கான விதிமுறைகள் தொடர்பில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுக்கும் இடையில் எட்டப்பட்ட கொள்கை உடன்பாட்டை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இலங்கைக்கான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சாத்தியமான பாதையை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியின் அடுத்த தவணையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு இந்த உடன்படிக்கை முக்கியமானது எனவும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், பொருளாதார ஸ்திரப்படுத்தல், மீட்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு மிகவும் தேவையான நிதி உதவியை இந்த உடன்படிக்கை பெற்றுக்கொடுக்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறியுள்ளார்.