தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

மூன்றாவது நாளாக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கடந்த 30ஆம் திகதி இரண்டாவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போது அவரிடம் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டது.

அத்துடன், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 13 பேருக்கு ஏற்கனவே நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது