தோழர் இராகவன் (ஆர்.ஆர்) அவர்களின் பிரிவால் நாம் கொண்டுள்ள பெருந் துயரத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்.பள்ளிக் காலம் தவிர்ந்த, தனது மொத்த வாழ்க்கையையும், நாற்பத்திரெண்டு வருட காலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த உன்னதமான, முதன்மையான போராளியாக அவர் திகழ்ந்தார். ‘புதியபாதை’ தோழர் சுந்தரம் அவர்களின் பாசறையில் இணைந்து, செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் அரவணைப்பிலும், நெறிப்படுத்தலிலும் சமூகப் புரட்சிக்குரிய போராளியாக தன்னை வார்த்தெடுத்துக் கொண்டார்.
கிளிவெட்டிப் பயிற்சி முகாம் முதல் காந்தீயப் பண்ணைகள் ஊடாக கட்சியின் கொழும்புத் தலைமையகம் வரை இடைவிடாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, ஒவ்வொரு காலகட்டத்தின் மாற்றத்திலும் தன்னை முதன்மைப் பங்காளியாக்கிக் கொண்டார். தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பயிற்சி வீரராக, செயலதிபரின் பார்த்தசாரதியாக, மாலைதீவுப் புரட்சியாளர்களுக்கு உதவி புரிந்த தளபதியாக, கட்சியின் நிதி ஆளுகைக்குரியவராக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக, ஒரு முழுமையான விடுதலைப் போராளியாக சமூகப் புரட்சியாளராக தன்னை அர்ப்பணிப்போடு வளர்த்துக் கொண்டார்.
செயலதிபரின் காலங்களில் அவரது நம்பிக்கைக்குரிய தூதுவராக செயற்பட்டது போலவே, தனது இறுதிக் கணம் வரையிலும் கட்சித் தலைவருக்கு அனைத்துமாய் செயற்பட்டு தலைவரினதும், கட்சியினதும் வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் ஆதாரமாய் திகழ்ந்தார்.
அடிக்கிற கையே அணைக்கும் என்கின்ற முதுமொழியை எம் வாழ்வில் உய்த்து உணர வைத்த அவர், கழகம் மற்றும் கட்சி விடயங்களில் காட்டும் உருக்குப் போன்ற கண்டிப்பும் கோபமும் அடுத்த கணமே பனிபோல கரைவதை எப்போதும் கண்டோம்.
நல்லறிவும் அனுபவங்களும் தரும் புத்தகங்களையும், வாசிப்புப் பழக்கத்தையும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கிக் கொண்ட அவர், தனக்கு கிடைத்த வளங்கள் அனைத்தையும் கொண்டு, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களையும் அறிவூட்டுவதிலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தேவைக்கு உதவுவதிலும் என்றுமே பேரவாக் கொண்டிருந்தார்.
தன் மக்களின் விடுதலைக்காக பிரம்மச்சாரியத்தை வரிந்து கொண்ட எமது அன்புத் தோழர், எக் கணமும் கட்சியின் வளர்ச்சி பற்றியும், தமிழ் மக்களை என்றும் ஐக்கியப்படுத்தி வழிநடாத்தக்கூடிய அமைப்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வளர்ச்சி பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
நிறைவான, உயர்வான பண்புகளைக் கொண்ட எம் நேசத்திற்குரிய தோழரிற்கு நாம் செலுத்தும் உயரிய அஞ்சலியென்பது, அர்ப்பணிப்பும் ஒற்றுமையுணர்வும் கடின உழைப்பும் கூடிய மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளாகவே அமையும்.