இம்முறை இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, பரீட்சை மத்திய நிலையமொன்றில் புவியியல் பாட வினாத்தாளின் ஒரு பகுதி வழங்கப்படாமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.  மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 14 பரீட்சார்த்திகள் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

குறித்த பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றிய மண்டப பொறுப்பதிகாரி மற்றும் பணிக்குழாமினர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வினாத்தாள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.