அரச நில அளவையாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையால், இன்று ஆறாவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்வதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதில் இருந்து தமது உறுப்பினர்கள் விலகியிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹேமச்சந்திர குணசிங்க தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு இவ்வருடம் சம்பள உயர்வை வழங்க முடியாதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.