மன்னார் வளைகுடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் அதிகளவானவை இந்திய மீனவர்களினால் கைவிடப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு கடல்சார் ஆய்வு நிறுவனங்களினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்தக் கழிவுகளில் 50 சதவீதமானவை மீன்பிடித்துறையில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட பிளாஸ்ட்டிக் கழிவுகளாக இருந்துள்ளன.

அவற்றில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்திய எல்லைப் பகுதியிலும் எஞ்சியவை இலங்கை எல்லைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடற்சார் பகுதிகளில் கைவிடப்படுகின்ற கழிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலும் இதுவரையில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.