அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியான போதும், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்திருந்தார்.

எவ்வாறாயினும் கைது நடவடிக்கையின்போது, உயிரிழப்பொன்று ஏற்பட்டதால் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்படி 10 இந்திய மீனவர்களும் நேற்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.