தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நாளை செல்லவுள்ளது. குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வடக்கு சுகாதாரத்துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலை வைத்தியர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை இடமாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்தத் தீர்மானத்திற்குப் பொதுமக்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்பின்னர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக கோபால மூர்த்தி ரஜீவ் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான சூழலில் இன்றைய தினம் இராமநாதன் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
தாம் இன்னும் பதவியில் தொடர்வதாகவும் தமக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் கடமைகளுக்காகத் திரும்பியதாகவும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அங்கு கடமையாற்றிய கோபால மூர்த்தி ரஜீவுக்கும், இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.
அதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சில மணி நேரத்திற்குப் பின்னர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
அதிகளவான காவல்துறையினர் வைத்தியசாலையின் வளாகத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நாளைய தினம் சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.