தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் (16.07.2024) மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க. சந்திரகுலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
35ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்ததோடு, நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி, மலர்மாலை அணிவித்து, மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதனையடுத்து கட்சியின் தொழிற்சங்கப் பொறுப்பாளர் சு. காண்டீபன்
அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
தோழர்களுக்கான மதிய உணவை தனது கூமாங்குளம் உணவகத்தில் இருந்து கழகத்தின் சுவிஸ் தோழர் பிரபா (கருணாகரன்) அவர்கள் இலவசமாக வழங்கியிருந்தார். நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் தலைவர், பொருளாளர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயலாளர், கட்சியின் உபதலைவர்கள், கட்சியின் உயர்பீட மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள்,
கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்டங்களின் நிர்வாகத்தினர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,
ஊர்ப் பெரியோர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், மறைந்த தோழர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.