இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.