காரைதீவு மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போனவர்களில் இதுவரையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று நேற்று முன்தினம் இரவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

சம்பவத்தின்போது, அதில் 14 பேர் பயணித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காரைதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், காணாமல் போயிருந்தவர்களில் ஐவர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதுடன், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்தநிலையில் குறித்த உழவு வண்டியின் சாரதியும் அவருடன் பயணித்த அவரது நண்பர் ஒருவரும் இன்று காலை (28) சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மற்றுமொரு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகின்றார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் மத்ரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் சம்மாந்துறை பதில் நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மத்ரசா முடிந்ததும் குறித்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பஸ் இல்லாத காரணத்தினால் குறித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் இவ்விடயத்தில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவர்கள் பயணம் செய்த குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.