2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கு பணம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணக்கு வாக்கு பணத்தின் கீழ் ஆயிரத்து 402 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாதத்திற்கான அரச சேவைகளைக் கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த கணக்கு வாக்கு பணத்தினூடாக ஒதுக்கப்படுகின்றது.

இந்த கணக்கு வாக்கு பணத்தினூடாக அதிக நிதி, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை 2 இலட்சத்து 20 ஆயிரத்து 6 மில்லியன் ரூபாவாகும்.

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 1 லட்சத்து 86 ஆயிரத்து 31 மில்லியன் ரூபாவும், பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 1 இலட்சத்து 70 ஆயிரத்து 535 மில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 1 இலட்சத்து 42 ஆயிரத்து 925 மில்லியன் ரூபாவும் கணக்கு வாக்கு பணத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 67 ஆயிரத்து 361 மில்லியன் ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கணக்கு வாக்கு பணம் மீதான விவாதம் நாடாளுமன்றில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற நிலையில், இன்றைய விவாதத்தின் நிறைவாக அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் கணக்கு வாக்கு பண திட்டம் தொடர்பில் கருத்துரைத்த, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பின் கீழ் மக்களுக்கு வழங்கக்கூடிய முழுமையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த திட்டத்தினூடாக ஈட்டப்படுகின்ற வருவாயை முழுமையான மட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக பல்வேறு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

அரச சேவையையும் அரச சேவையாளர்களையும் வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

இதேவேளை, கொலையாளிகளுக்கும், குற்றவாளிகளுக்கும், அவர்களைப் பாதுகாத்தவர்களுக்கும் புதிய அரசாங்கத்தினூடாக தண்டனை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி, ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தலா 50 லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி தெரிவித்தார்.

இதனையடுத்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்தை முன்வைத்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் அப்போதைய அரசாங்கம் 60 ஆயிரம் பேரை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

அதன்படி. திலிப் வெதாராச்சி குறிப்பிட்ட நட்டஈடுடன் குறித்த 60 ஆயிரம் பேரை கொலை செய்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் கொலையாளிகளுக்கும், குற்றவாளிகளுக்கும், அவர்களைப் பாதுகாத்தவர்களுக்கும் புதிய அரசாங்கத்தினூடாக தண்டனை வழங்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.