ரஷ்ய – யுக்ரைன் போரில் பங்கேற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள வட மாகாண இளைஞர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, இந்த விடயம் தொடர்பான விபரங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோருக்கு சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். பின்னர் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ரஷ்ய – யுக்ரைன் போரில் பங்கேற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள பலர் இவ்வாறு சிக்கியுள்ளதுடன் இது பாரிய பிரச்சினையாக உள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடும் தாமதமடைந்துள்ளது. எனவே. இந்த விடயத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், குறித்த தரப்பினரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். குறிப்பாக முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் ரஷ்ய – யுக்ரைன் போரில் பங்கேற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் காணப்படுகிறது.
அவ்வாறான தரப்பினரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் சில சிக்கல்களும் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும், அங்கு பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்கள் விடயத்தில் தலையீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.