மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் கொழும்பு நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கொள்ளுப்பிட்டி சந்தியில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த செலுத்திச் சென்ற டிஃபென்டர் ரக வாகனம் பம்பலப்பிட்டி திசையிலிருந்து வந்த மகிழுந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

எனினும், குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று காலை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்னவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர், வாகனமொன்றிற்கு விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் வாகனத்தில் பயணித்தவர்களிடம் ஒழுங்கீனமாகச் செயற்பட்டு, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கமைய அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேநேரம், சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு மகிழுந்தொன்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னதாக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.