அனர்த்த நிலைமை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குறைத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுதினம்(10) முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த கலந்துரையாடலை நடத்தியதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு, நீர்ப்பாசனத் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், முப்படையின் அதிகாரிகள் என அனைத்து தரப்பினரையும் இணைத்து Zoom ஊடாக கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை இடையூறுகளின்றி நடத்த தேவையான நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 431 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்கள் 17 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.