புதிய அரசியலமைப்பை வகுக்கும்போது, சுகாதார சேவையைப் பெறுவதற்கான உரிமையை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே, சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டுமாயின் அதற்கு அவசியமான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது, அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் நிறைவில் மக்கள் தங்களுக்குத் தேவையான இடங்களில் தமக்கான சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்ற உறுதிப்பாட்டினை அரசாங்கத்தினால் வழங்க முடியும்.
அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை சுகாதார அமைச்சு தற்போது ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சேவைகளின் தரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலை மற்றும் மருத்துவ நிலையங்களை ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரம் சுகாதார அமைச்சுக்கு உள்ளது. இது தொடர்பில் முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை சில தனியார் வைத்தியசாலைகள் மீறிவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது எதிர்கொண்ட பல சிக்கல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் அங்கு அறவிடப்படும் கட்டணம் என்பன தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.
இதற்காக சில தனியார் வைத்தியசாலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.