வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்இ அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

இதில், காவல்துறை திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரச நியமனம் வழங்குகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதேசவாசி ஒருவர் கோரினார்.

தொழில்வாய்ப்பு வழங்குகையில் மாற்றுத்திறனாளிகளுக்குக் குறிப்பிட்ட ஒதுக்கீடொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.