மன்னார் நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்துடன் தொடர்புடைய மூவர் உள்ளடங்கலாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.