சட்ட மா அதிபரை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கு எதிராகவும், சட்ட மா அதிபரைப் பாதுகாப்பதற்காகவும் முன்னிற்பதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட மா அதிபர் தொடர்பில் கடந்த நாட்களில் வெளியிடப்படும் தவறான கருத்துக்கள் தொடர்பில் தங்களது சங்கம் கவலையடைவதாகவும் அந்த சங்கத்தின் பதில் செயலாளர் டஸ்யா கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழக்கொன்றுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை விடுவிப்பதற்காக சட்ட மா அதிபரினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மரபுகளுக்கு அமைய இடம்பெற்றதாகவும் டஸ்யா கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குறித்த தீர்மானம் தொடர்பில் தங்களது சங்கம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சட்ட மா அதிபரைப் பதவியிலிருந்து நீக்கும் எந்தவொரு முயற்சியையும் தங்களது சங்கம் எதிர்க்கும் என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.