நாடளாவிய ரீதியில் இன்று (27) இடம்பெறும் தாதியர் சங்க போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதான வளாகத்தில் ஒன்று கூடிய தாதியர்கள், பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த இந்த போராட்டத்தின் போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.