கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மேற்கொண்ட தேர்தல் கூட்டணி பற்றிய கலந்துரையாடலின் இன்றைய நிலை என்ன? சில கட்சிகள் உள்வரும் செய்திகளால் உள்ளிருக்கும் சில கட்சிகள் வெளியேறுகின்றனவா?பதில்: கடந்த 05.01.2025 அன்று வவுனியாவில் நடைபெற்ற DTNA இன் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் முடிவில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முகம் கொடுக்க ஏதுவாக சக தமிழ் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசி ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு DTNA இன் யாழ். மாவட்டத்தைச் சார்ந்த இணைத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், நாம் பேசியிருந்த அமைப்புகள் யாவும் கூட்டாக தேர்தலை முகம் கொடுக்க கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதோடு, நேரடிப் பேச்சுகளில் ஈடுபடவும் சம்மதம் தெரிவித்து கடந்த 23.02.2025 அன்று முதலாவது சந்திப்பு நடைபெற்றது.
ஒரே அணியாக செயற்படுவது, ஒரே கட்சியின் பெயரில் போட்டியிடுவது, அக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது ஆகிய விடயங்களில் இணக்கம் காணப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, தமிழ் மக்கள் கூட்டணியின் மணிவண்ணன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பிரதிநிதிகளும் தத்தமது தலைமைகளுடன் பேசி முடிவு சொல்ல வேண்டும் எனக் கூறியதன் அடிப்படையில் அதற்கு போதியளவு அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே அனைவரும் இணைந்து மேற்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் மறுநாள், கூட்டுப் பற்றி தீர்மானம் எதற்கும் தாம் வரவில்லை என ஐங்கரநேசன் அவர்கள் ஊடகங்கள் மூலம் அறிவிப்பை விடுத்திருந்ததோடு கூட்டு முயற்சிகளுக்கு தமது தரப்பு தொடர்ந்து வராமலிருக்க சில கட்சிகளின் உள்வருகையை தனிப்பட்ட ரீதியில் சிலரிடம் காரணம் காட்டியிருந்தார். அதனால் அவரது தரப்புக்கு 26.02.2025 இல் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இரண்டாவது சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியின் மணிவண்ணன் தரப்பும், முதலாவது சந்திப்பில் கூறியிருந்ததைப் போல, கூட்டில் தொடர்வது பற்றி இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை, விக்கி ஐயாவுடன் பேசித்தான் முடிவெடுக்க வேண்டுமென்றார். இவ்வாறான ஒரு நிலையில், உங்கள் முடிவை இயலுமானளவு விரைவாக அறியத் தரும்படி கேட்டிருந்தோம்.
இரண்டு நாட்கள் கழித்து, தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவே விக்னேஸ்வரன் ஐயா முடிவு செய்துள்ளார் எனும் தகவலை மணிவண்ணன் அனுப்பியிருந்தார். ஆனாலும் இம் முடிவு விக்னேஸ்வரன் அவர்களின் தீர்மானம் அல்ல என்பதை எமது இணைத்தலைவர் ஒருவர் அவருடன் பேசியதிலிருந்து அறிய முடிந்தது. அத்துடன் விரைவில் அனைத்து அமைப்புகளுடனும் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தினால் நல்லது என்றும் விக்னேஸ்வரன் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சமூக வலைத் தளங்களிலும் தமது நண்பர்களிடமும் தமது கருத்துகளை தெரிவித்திருந்த மணிவண்ணன் தரப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) கூட்டுக்குள் இணைய DTNA தரப்பினர் அழைப்பு விடுத்தமையே தாம் விலகியதற்கான காரணம் எனக் கூறியுள்ளனர்.
இரண்டாவது சந்திப்பின் முடிவில், பத்திரிகையாளர்களுடன் பேசும் போது DTNA பேச்சாளர் தெரிவித்த ஒரு வசனத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டும் இவர்கள், ஒரு பத்திரிகைச் சந்திப்பில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகமான, சமூகத்தின் தேவையையுணர்ந்த சொல்லாடல்களின் அவசியத்தை உணரத் தவறிவிட்டனர்.
EPDP யை கூட்டுக்குள் அழைக்கும் தீர்மானத்தை DTNA என்றும் மேற்கொள்ளவில்லை. இனியும் அவ்வாறான அழைப்பை விடுக்கும் சிந்தனையேதும் இல்லை. நடைமுறைச் சாத்தியமான விடயமாகவும் அது இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிதறிப் போன, ஒருமித்த நோக்கங்களைக் கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து தேர்தலை முகம் கொடுக்க வேண்டுமென்பதே பேச்சுகளிற்கு முன்பு DTNA யிடம் இருந்த எதிர்பார்ப்பாகும்.
ஒன்பது கட்சிகள் பேசிக்கொண்ட கூட்டு இப்போது ஏழு கட்சிகளாகியுள்ளது. அந்த எண்ணிக்கை மீண்டும் கூட வேண்டுமென்பதே DTNA இன் விருப்பமாகும். இணைந்துள்ள கட்சிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாக உள்ளது. தொடர்ந்து அக் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வேட்பாளர் தேர்வுக்குழு அமைக்கப்படவுள்ளது. காலம் யாருக்காகவும் நின்று நகர்வதில்லை என்பதே நிதர்சனமானது.