ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு நேற்று நடைபெற்றது. 2023 மார்ச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF) அமைவான ஒப்பந்தம் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உலக பொருளாதார ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கிக்கொள்ளும் நிலையுடையதாக மாற்றுவதற்கு இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கை மக்களின் வலுவான ஆணையை பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும், இணக்கம் காணப்பட்ட இலக்குகளை மக்களின் விருப்பத்துக்கு அமைய அடைந்துகொள்வதற்குமான தயார்நிலையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள மீளாய்வுகளை சாதகமாக நிறைவு செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி இதன்போது கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவிடம் உறுதிப்படுத்தினார்.

இலங்கை நிலைப்பேறான ஸ்திரதன்மையை அடைந்துகொள்வது தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளருக்கு இடையில் இதன்போது இருதரப்பு ரீதியான இணக்கம் எட்டப்பட்டது.

செழுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுதல் மற்றும் அன்னியோன்னியமாக செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.