கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இருந்து ஒரு குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகர சபை உள்ளிட்ட சில சபைகளில் சுயேச்சை அணியாக போட்டியிட முயற்சிக்கின்றதா?பதில்: எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதன் சங்குச் சின்னத்திலேயே போட்டியிடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தந்திரோபாய ரீதியாக அரசியல் கட்சிகளால் சுயேச்சைக்குழுக்கள் களமிறக்கப்படும் சந்தர்ப்பங்களை தேர்தல் அரசியலில் நாம் முன்பு பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறோம். அவை கட்சியின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் இன்றைய நிலையில் அவ்வாறான எந்தவொரு தேவையும் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் எண்ணமும் இல்லை.
அவ்வாறு போட்டியிட முயலும் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் விருப்பமும் இல்லை. கூட்டணியின் அனுமதியின்றி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சம்பந்தமாக ஏற்கனவே எமக்கு கிடைத்த தகவல்களை அங்கத்துவக் கட்சிகளுடன் பகிர்ந்துள்ளோம். அவர்கள் இது குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், நீடித்து நிலைக்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வுக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் அரசியல் கோரிக்கைகள் தாபனமயப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புகள் மூலம் முன்னெடுக்கப்படும்போதே வலுவானதாக அமையும். சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புகளால் அங்கீகரிக்கப்படும்.
தன்னிச்சையாக களமிறங்கும் சுயேச்சைக்குழுக்கள் ஒரு போதும் அரசியல் அங்கீகாரத்தை பெறுவதில்லை. மாறாக, சுயநலம் நிறைந்த உள்நோக்கங்களின் பின்னணியிலேயே இவ்வாறான முன்னெடுப்புகள் அமைகின்றன என்பதுவே பெரும்பாலான மக்களின் அபிப்பிராயமாகும்.