கேள்வி 01 : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் பங்காளிக் கட்சியாக இயங்கிய தமிழ்த் தேசியக் கட்சி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கூட்டணிக் கட்சியாக மாறியுள்ளதே? இது குறித்து உங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்ன? இதன் தாக்கங்கள் என்ன?
பதில்: 2023 ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒப்பமிட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஒர் அங்கத்துவக் கட்சியாக இணைந்து கொண்ட அரசியல் அமைப்பே தமிழ்த் தேசியக் கட்சியாகும். சட்டத்தரணி ந.சிறீகாந்தா தலைவராகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் செயலாளராகவும் உள்ளனர். இரண்டு வருடங்கள் எங்களுடன் பயணித்தவர்கள் அவர்கள். யாழ்க் குடாநாட்டுக்கு வெளியே அவர்களது கட்சிச் செயற்பாடுகள் இல்லாத நிலையிலும்கூட கூட்டணியின் தீர்மானங்கள் அனைத்தும் அவர்களினதும் ஒப்புதலுடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில், உள்ளூராட்சித் தேர்தலுக்காக யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுகளிலும் தீர்மானத்திலும் அவர்களின் காத்திரமான பங்களிப்பு இருந்தது. அதேநேரத்தில், கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரின் பட்ஜட் செயற்பாடு குறித்த விமர்சனங்களை அவர்கள் முன்வைத்தபோது அவர்கள் எதிர்பார்த்தது போலவே உரிய முறையில் அதற்கு தீர்வும் காணப்பட்டது.
இந்த நிலையில், கூட்டணியுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கலந்துரையாடாமல், கூட்டணிக்கு எவ்வித முன்னறிவிப்பும் வழங்காமல் இன்னொரு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தம் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டமையை நாம் அறிந்திருந்தோம். அதனால் எமது கூட்டணிக்கு பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதால் நாம் நிலைமைகளை பொறுமையாக அவதானித்து வந்தோம்.
நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தைப் பற்றி அடிக்கடி பேசும் அக் கட்சியின் தலைவர், ஒரு கூட்டணியில் இருந்து எவ்வாறு நாகரீகமாக வெளியேறுவது என்பதை, எம்முடன் கூட்டணிப் பேச்சுகளில் ஈடுபட்டு பின்னர் விலகிச் சென்ற இளம் அமைப்புகளின் இளம் வயது உறுப்பினர்களிடம் தான் கேட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனாலும் அவருடைய கட்சியின் சில உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களாக செயற்பட விருப்பம் தெரிவித்திருப்பதால் நிலைமைகளை ஆராய்ந்து விரைவில் அக் கட்சியின் அங்கத்துவம் குறித்து முடிவு செய்வோம்.
கேள்வி 02: அவசியம் ஏற்பட்ட போது ஆயுதம் ஏந்திப் போராடினோம் என்று ஜே.வி.பி இன் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருப்பது பற்றி ?
பதில் : “நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்” என்று செயலதிபர் தோழர். க. உமாமகேஸ்வரன் அன்று கூறியதுதான் ஞாபகம் வருகிறது. தமிழர்கள் மீது குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தில் இருந்து தங்களைப் பாதுகாக்க எமது இளைஞர்களுக்கும் வேறு வழி தெரிந்திருக்கவில்லை. அரசு திட்டமிட்ட வகையில் எங்களை அழிக்க நினைக்கையில், அவர்களுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்று ரில்வின் சில்வா நினைத்ததைப் போலவேதான் அன்று எமது இளைஞர்களும் தீர்மானித்தார்கள். ஆகவே நாம் ஆயுதம் ஏந்திப் போராடியதை தவறென்று சொல்ல எந்தவொரு சிங்கள அரசியல் தரப்புகளுக்கு அருகதையில்லை.
மேலும், ஜே.வி.பி யானது பெரும்பான்மை சிங்கள இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாக இருந்ததன் காரணத்தால் காலம் கனிந்த போது ஆட்சியதிகாரத்தைப் பெற முடிந்தது. தமக்கு இசைவான வகையில் சட்டங்களை வளைக்கவும் பயன்படுத்தவும் முடிகிறது. அவர்களின் கைக்கு அதிகாரம் வரும் வரைக்கும், ஒரு நாளிலேனும் ரில்வின் சில்வாவினால் இன்று சொல்ல முடிவதைப்போல சொல்லியிருக்க முடியவில்லை. சொல்லவும் துணியவில்லை. ஆனால் தமிழர்களாகிய நாம் இந்த நாட்டின் சிறுபான்மையினம். என்றும் அதிகாரத்திற்கு வரமுடியாத இனம், ஆகவே தான் இந்த நாட்டின் உச்சச் சட்டமான அரசியலமைப்பில், மீளப்பெறமுடியாத வகையில் வழங்கப்பட வேண்டிய உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுகிறோம். அதிகாரத்தில் உள்ள ஜே.வி.பி கூட அவ்வாறான உரிமைகளை வழங்கும் என எதிர்பார்க்க முடியாது.
தாம் ஆயுதம் ஏந்தியது நியாயம்தான் என்றால், தமிழர்களும் அதே காரணத்துக்காகத்தான் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை குறைந்த பட்சம் மனதால் உணர்ந்தால் கூட, சிறையில் உள்ள அரசியல் கைதிகளை ஜனாதிபதியால் விடுதலை செய்ய முடியும். செய்வார்களா என்றால் இல்லை என்பதே தற்போதைய பதில்.