கேள்வி :
உங்கள் கட்சியின் வேட்பாளர்களில் சிலர் தங்களுடைய பிரச்சாரத்திற்காக வெளியிடும் பிரசுரங்களில் இன்னும் TNA தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரையும் தங்களுடைய சொந்தக் கட்சியின் பெயரையும் பயன்படுத்துகிறார்களே? அப்படிப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அதிகமான பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்களா? கூட்டணியைப் பலப்படுத்துவதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பதில்:
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தீர்மானம் மேற்கொண்டபோது, கூட்டணியாக போட்டியிடுவதெனவும் அதன் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் நிறைவேற்றுக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அத் தீர்மானம் கூட்டணியின் அனைத்து மட்டங்களிலும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
2023ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்போடு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக வெளியேறியதையடுத்து கூட்டமைப்பின் ஏனைய இரண்டு கட்சிகளும் (புளொட், ரெலோ) இன்னும் மூன்று கட்சிகளுடன் (ஈ.பி.ஆர்.எல்.எவ், த.தே.க, ஜ.போ.க) இணைந்து தமிழ் மக்களின் நலன்களுக்கான ஒற்றுமைக் கூட்டமைப்பாக செயல்பட முடிவு செய்தன. அதேநேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று பதிவு செய்யப்படாத, கட்டமைப்புகள் ஏதுமற்ற அரசியல் அணியாக செயற்படுவதில் எழக்கூடிய நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பெயரில் செயற்படத் தீர்மானிக்கப்பட்டது. அவ் அமைப்பை தமிழ் மக்களின் முதன்மையான பிரதிநிதித்துவ அமைப்பாக மாற்றியமைக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டே இன்றுவரை செயற்பட்டு வருகிறோம்.
நடைமுறையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) செயற்பாட்டில் இல்லையென்றே கொள்ளவேண்டியுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவே இன்று தமிழ் தேசியப் பரப்பில் இயங்குகின்ற பிரதான அமைப்புகளாகவுள்ளன. இந் நிலையில், தேர்தல் பிரசுரங்களில் TNA இன் பெயரைப் பயன்படுத்துவதில் ஒரு அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் தத்தமது கட்சிகளை அடையாளப்படுத்துவதற்கு அப்பால், கூட்டணியை முதன்மைப்படுத்தி, தேர்தல் மூலம் கூட்டணியைப் பலப்படுத்தி, கூட்டணிக்குள் அதிகளவு தமிழ் மக்களை உள்ளீர்க்க வேண்டும் என்பதே கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்களின் பெரு விருப்பமாகவும் உள்ளது. அதன் மூலமே வடக்கு கிழக்கில் பரந்தளவிலான வலுவான மக்கள் முன்னணி ஒன்றை உருவாகிக் கொள்ள முடியும். அந்த இலக்கை நோக்கி நகர்வதே எமது செயற்பாடுகளின் அடிப்படையாகவும் உள்ளது. இதனை அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
குறிப்பாக, கூட்டணியின் மாவட்டக்குழுக்களின் இணைப்பாளர்களும் கூட்டணியின் மாவட்டத் தேர்தல் முகவர்களும், கூட்டணியின் உள்ளூராட்சி வேட்பாளர்களும் இவ் விடயத்தில் விசேடமாக கவனம் செலுத்த வேண்டியவர்களாகவுள்ளனர்.