மியன்மாரில் நில அதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று விசேட விமானத்தில் மியன்மாருக்குப் புறப்பட்டுச் சென்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய மிகக் குறுகிய காலத்தில் முப்படைத் தளபதிகளின் தலைமையில் இந்த விசேட அனர்த்த நிவாரண சேவை குழு தயார்ப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

மகா சங்கத்தினரின் தலைமையில், மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ உதவிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும், குழுவுடன் மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பணிக்குழு இந்த நடவடிக்கைக்கு அவசியமான இராஜதந்திர செயற்பாடுகளை மேற்கொள்வதில் முனைப்புக் காட்டியதுடன், ஸ்ரீலங்கன் விமான சேவையும் இந்த பணிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளது.

இந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலம், பிராந்தியத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், அவசரநிலை ஏற்பட்டால் நட்பு நாடுகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுகிறது.