இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை பேணப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது பாக்கு நீரிணையின் இரு பக்கமும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினை என்பதால் இந்த விடயத்தில் மனிதாபிமானதும் ஆக்கப்பூர்வமானதுமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.
இது மீனவர்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினை எனவும், அண்மைய காலங்களில் இடம்பெற்ற சில செயற்பாடுகள் மீள் பரிசீலனை செய்யப்படலாம் எனவும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் விடுவிக்கப்படுவர் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்தநிலையில் மீனவர் பிரச்சினையில் இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் பரஸ்பரம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.