கேள்வி :
வடக்கு கிழக்கு முழுவதும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் உப தலைவர் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே அது உண்மையா? யாருடன் சேருவது என்பதை உங்கள் கட்சி தீர்மானித்து விட்டதா?

பதில்:
ஒரு கட்சியாக அவ்வாறான தீர்மானம் ஏதும் இதுவரை இல்லை. தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் ஆட்சி அமைக்கக்கூடிய வகையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் இரண்டு விடயங்களை பிரதானமாக முன்வைத்திருந்தோம்.
முதலாவது, எமது வளங்களை நாங்களே நிர்வகிப்பது, எமது எதிகாலத்தை நாங்களே தீர்மானிப்பது எனும் கருத்தினை முன்னிலைப்படுத்தியிருந்தோம். அதன் பொருள் அரசாங்கத்தைச் சார்ந்த கட்சியோ அல்லது தென்னிலங்கைச் சமூகத்தின் பிரதான அரசியல் கட்சிகளோ தமிழர் பிரதேசங்களில் அதிகாரத்தைப் பெறுவதை தடுப்பது என்பதாகும்.
இரண்டாவது, உள்ளூராட்சி மன்றங்களில் தமிழர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைப்பை வழங்குவது அல்லது பெறுவது எனவும் கூறியிருந்தோம்.
எமது மக்களும் எங்கள் எதிர்பார்ப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. மக்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய கடமையினை பொறுப்புடன் ஆற்றியுள்ளனர்.
அதேபோல எமக்குரிய கடமையையும் நாம் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என விரும்புகிறோம். எமது கூட்டணியின் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் அந்தப் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அதன் அடிப்படையில் எம்மைத் தவிர எமது தாயகப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கக்கூடிய பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சியுடனும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுடனும் பூர்வாங்கப் பேச்சுக்களை நடாத்தியுள்ளோம்.
சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் பிராந்திய மட்டத்திலான தலைவர்களுடனும் ஆங்காங்கே பேச்சுகள் நடைபெற்றுள்ளன.
நாடாளுமன்றக் கூட்டங்களை முடித்து இன்று வடக்கிற்கு வரக்கூடிய கட்சித் தலைவர்களுடன் பேச்சுகள் தொடரப்படவுள்ளன.
பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள அனைவரினது பிரதான நோக்கம் ஒன்றே. தமிழ் தேசிய சக்திகள் இணைந்து இயன்றவரையிலும் அதிகளவு சபைகளில் நிர்வாக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதே அது.
அதே நேரத்தில் ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு கட்சிக்கும் மக்கள் வழங்கிய பிரதிநிதித்துவ ஆணையை ஏனைய கட்சிகள் யதார்த்தமான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாம் வலியுறுத்துவோம்.
எவ்வித நிபந்தனைகளுமின்றி ஒரே கட்சியுடன் ஒன்றிணைவதோ, அல்லது கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்து நிற்பதோ, எமக்கு வாய்ப்புள்ள சபைகளில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள அக்கறை காட்டாதிருப்பதோ ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியாது.
எமக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் சபைகளில் நல்ல ஆட்சியினை வழங்குவதும் ஏனைய சபைகளில் பொறுப்புள்ள எதிர்க்கட்சிக்கான கடமைகளை ஆற்றுவதுமே எமது நோக்கமாகும், அதுவே மக்கள் எமக்கிட்ட பணியுமாகும்.