பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று(9) உத்தரவிட்டது. தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச வங்கியொன்றில் பேணப்பட்ட ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 6 நிலையான வைப்புக் கணக்குகளை வங்கியிலிருந்து  நீக்கிக் கொண்டதால் அரசாங்கத்துக்கு 173 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் குறித்து சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஆணைக்குழு கடந்த 16 ஆம் திகதி மன்றுக்கு அறிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைப்பதற்கு வழிவகுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடக சந்திப்பில் வௌியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அன்றைய தினம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.