கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் ஆட்சேபனையை முன்வைப்பதற்கு சட்ட மாஅதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று(17)  கால அவகாசம் வழங்கியது.

மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குறித்த மனு எஸ்.துரைராஜா, மேனகா விஜேசுந்தர, சம்பத் விஜேரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு மீதான ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக பிரதி சொலசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கு 2 வார கால அவகாசம் வழங்குமாறும் மன்றில் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், குறித்த ஆட்சேபனைகளை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் எதிர் ஆட்சேபனைகள் இருப்பின் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதரர்களுக்கு உத்தரவிட்டது.

மனு எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக இரகசிய பொலிஸின் விசேட விசாரணை பிரிவின் பொறுப்பாளர் மாதவ குணவர்தன, இரகசிய பொலிஸின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால, பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.