உள்ளூராட்சி மன்றமொன்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியும் இலங்கை தமிழரசுக் கட்சியும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் முதலாம் பகுதியாராகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரண்டாம் பகுதியாராகவும் சேர்ந்து ஆட்சியமைப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கை கொழும்பில் இன்று(11) கைச்சாத்திடப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையில் மாத்திரம் முதலாம் பகுதியாரின் உறுப்பினரொருவர் முதல் 2 வருடங்களுக்கு தவிசாளராக  தெரிவு செய்யப்படுவதற்கும் இரண்டாம் பகுதியாரின் உறுப்பினர் உப தவிசாளராக தெரிவு செய்யப்படுவதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இரண்டாம் பகுதியாரின் உறுப்பினர் மூன்றாம், நான்காம் ஆண்டுகளில் தவிசாளராகவும் முதலாம் பகுதியாரின் உறுப்பினர் உப தவிசாளராக தெரிவு செய்யப்படுவதற்கும் கூட்டாக இணங்கி செயற்படுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.