ஈரானில் உள்ள இலங்கை மற்றும் நேபாளம் நாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  இலங்கை மற்றும் நேபாள அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைய இந்த பணிகள் இடம்பெறுவதாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  இதன்படி, ஈரானில் உள்ள இலங்கையர்களும் நேபாளம் மக்களும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் டெலிகிராம் பக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடிவும் எனவும் 098 9010 144557, 098 9128 109115 அல்லது 098 9128 109109 என்ற தொலைபேசி இலக்களின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் எதிர்வரும் காலங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேலின் நகர்ப்புறங்களில் ஈரான், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையிலேயே இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.