இஸ்ரேல் – காஸா விவகாரம் உள்ளடங்கலாக உலக நாடுகளில் நிலவும் தீவிர பிரச்சினைகளால் சர்வேதேச அரங்கில் இலங்கை விவகாரம் சற்று பின்தள்ளப்படக்கூடும் என தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை மீதான தமது அழுத்தம் தொடரும் என்றும் உறுதியளித் துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு நேற்றிரவு 7 மணியளவில் ஜெட்வின் ஹோட்டலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த உயர்ஸ்தானிகர் நாட்டின் சமகால அரசியல், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுமார் ஒன்றரை மணிநேரம் வரை கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், டெலோவின் பாராளுமன்ற குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்த ராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பில் கருத்துரைத்த தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு வழஙங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டிக்காட்டியதுடன், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு ஐ.நா. அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பில் எடுத்துரைத்த அவர்கள்,
இவ்விடயம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மை மற்றும் நீதி என்பன நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டனர்.
அதேபோன்று அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் காணி சுவீகரிப்பு, இராணுவமயமாக்கல், பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்படல். பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர் பிரயோகம் உள்ளிட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அதேவேளை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒருபோதும் கைகொடுக்காது எனவும் மாறாக அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கையாகவே அமையும் எனவும் தமிழ்ப் பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தனர்.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாத மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைத் தொடர்பில் காத்திரமானதொரு பிரேரணை கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகளின் கருத்துகளை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இவ்விடயத்தில் தாம் இலங்கைக்கு அழுத்தம் வழங்கி வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வழுத்தம் தொடரும் எனவும் உத்தரவாதமளித்தார்.
இருப்பினும் காஸா, இஸ்ரேல், ஈரான் உள்ளடங்கலாக உலக நாடுகளில் நிலவும் தீவிர பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், இவ்வாறான சமகால தீவிர நெருக்கடிகளால் இலங்கை விவகாரம் சற்று பின்தள்ளப்படக்கூடும் என சுட்டிக்காட்டினார்.